காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார் யோகி பாபு. ஒரு விஷயம் கவனிக்கணும் சமூக அக்கறை கொண்ட படங்களில் தான் அவர் ஹீரோவாக நடிக்கிறார். ‘மண்டேலா’ ‘கிணத்தக் காணோம்’, இன்னும் சில படங்களின் வரிசையில் யோகி பாபு நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் ‘ சிங்காரம் ‘.
பொள்ளாச்சி அருகே உள்ள சிற்றூர்தான் படத்தின் கதைக்களம். ராக் ப்ரொடக்சன் சார்பில் ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். படத்தை கே.வி. கதிர்வேலு இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். யோகி பாபு நடிப்பில் 300 வது படமாம் இது. யோகி பாபு மற்றும் வேலமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சாம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ராயன், டி.எஸ். ஆர். தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், தீபா சங்கர், ஜாவா சங்கரேசன் உட்பட நரிக்குறவர் கேரக்டர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதையை உருவாக்க நரிக்குறவர் சமுதாயத்தினரின் வரலாறு மற்றும் பின்னணியை தெரிந்து கொள்வதற்காக இரண்டு வருடங்களாக விரிவான ஆய்வுகள் மெனக்கட்டு செய்து இப்படத்தை உருவாக்கியதாக டைரக்டர் சொல்லி இருந்தார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அதிகாரம் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, மற்ற எளியவர்களை புறக்கணிப்பது இங்கே நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களுக்கான உரிமையை பேசும் படமாக இது உருவாகியுள்ளது. படத்தில் நரிக்குறவர் சமுதாய மக்களாக முடிந்தவரை அவுட் புட் கொடுக்க நினைத்திருக்கிறார்கள் நடித்தவர்கள். ஆனால் அவர்கள் பேசும் ஸ்லாங்கை முழுமையாக பார்க்க முடியவில்லை. ஓரளவிற்கு எம்.எஸ் பாஸ்கர் அந்த கேரக்டருக்கு ஜீவன் கொடுத்திருக்கிறார். யோகி பாபு எல்லா படத்திலும் பேசுவதை போலத்தான் இதிலும் நையாண்டி, நக்கல், கவுண்டர் பேசுகிறார். ஒரு சீனில் தீபா சங்கர் பேசுகிறாரே, வள..வள வசனம்… ஆடியன்ஸை கொட்டாவி விட வைக்கிறது. நாடோடிகளாக இருக்கும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த யோகி பாபு குடும்பத்தார் அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்ததும் ஏற்படும் மாற்றங்களில் எதார்த்தம் இருக்கிறது.
சாமானிய நரிக்குறவர், எம்.எல்.ஏ ஆக முடிந்ததா இல்லையா என்பது கதை. மறைந்த மாரிமுத்து, மனோபாலா முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள் என்பதில் இருந்தே தெரிகிறது இது சில வருடங்கள் கிடப்பில் கிடந்த படம் என்பது.
யோகிபாபுவுக்கு நல்லவர் இமேஜ் ஏற்படுத்தும் படம், ‘சிங்காரம்’
-ராமு சரவணா