பலே வெள்ளையத்தேவா – விமர்சனம்

போஸ்ட் மாஸ்டராக வேலை பார்க்கும் ரோகிணி தனது மகன் சசிகுமாருடன் கிராமம் ஒன்றுக்கு மாற்றலாகி வருகிறார். அங்கே குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியான சங்கிலிமுருகன்-கோவைசரளாவிடம் பாசமாக பழகும் சசிக்குமார், கறிக்கடை நடத்தும் பாலாசிங்கின் மகளான தன்யாவை காதலிக்கிறார்.

உள்ளூரில் கேபிள் டிவி தொழில் நடத்தும் துணை பஞ்சாயத்து தலைவர் வளவனுக்கும் சசிகுமாருக்கும் டிஷ் ஆண்டெனா வைத்திருப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு கைகலப்பாகிறது. இதனால் சசியின் மீது வழக்கு பாய, அவரது கவர்மென்ட் வேலை கனவுக்கு வேட்டு விழுகிறது.

சசிகுமாருக்கு ஒருபக்கம் வளவனால் எதிர்ப்பு ஏற்பட, இன்னொருபக்கம் தன்யாவின் தந்தை பாலாசிங்கும் இவர்கள் காதலை எதிர்க்கிறார்.. இந்த இருவரையும் சமாளித்து எப்படி தனது காதலியை சசிகுமார் கைபிடிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

மிகப்பெரிய ஆக்சன், வெட்டருவா, வேல் கம்பு என எதையும் தூக்காமல் ஜனரஞ்சகமான காமெடி ரூட்டிற்கு மாறியுள்ளார் சசிகுமார்.. இருந்தாலும் ரசிகர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக ஒரு சண்டை காட்சியிலும் திருப்திப்படுத்துகிறார். கோவை சரளாவுக்கும் அவருக்குமான காமெடி காட்சிகளை இன்னும் மெருகேற்றி இருந்தால் கூடுதல் கலாட்டாவாக இருந்திருக்கும்.

அறிமுக கதாநாயகி தன்யாவுக்கு சசிகுமாரை முறைப்பதும் பின் காதலிப்பதுமான டிபிகல் கிராமத்து ஹீரோயின் வேலைதான்.. ஆனாலும் கொடுக்கப்பட்ட வேலையை ஓரளவு சரியாகவே செய்திருக்கிறார். ‘செல்பி காத்தாயி’ஆக வரும் கோவை சரளா ஆன்லைனில் பொருட்களை விற்பவர்களை படுத்தும் பாடு இருக்கிறதே.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சிரிப்பு ரகம்.. அவருக்கு ஈடுகொடுத்து அவரது கணவனாக நடித்துள்ள சங்கிலி முருகன் காமெடியில் அசத்துகிறார்.

சசிகுமாரின அம்மாவாக ரோகிணியின் பாந்தமான நடிப்பு நிறைவாக இருக்கிறது. கேபிள் டிவி கனெக்சன் வாங்காததற்கு எல்லாமா அடிப்பார்கள் என்கிற கேள்வியுடன் வில்லனாக படம் முழுதும் வருகிறார் வளவன். போலீஸ் ஊருக்குள் வரும்போதெல்லாம் பாலசிங் அவ்வபோது அரிவாள் தூக்குவதற்கு வைத்திருக்கும் பிளாஸ்பேக் செம.. சசிகுமாரின் நண்பனாக படம் முழுக்க வந்தாலும் நம் மனதில் நிற்க மறுக்கிறார்.

கிடாரி படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா தான் இதிலும் இசையமைத்துள்ளார்.. ‘வண்டியிலே நெல்லு வரும்’ ட்யூன் இன்னும் அவரைவிட்டு போகவில்லை என்பதை பின்னணி இசையில் பல இடங்களில் ஞாபகப்படுத்துகிறார். ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் அந்த வயலூர் கிராமத்தின் எதார்த்த அழகு பளிச்சிடுகிறது..

அறிமுக இயக்குனரான சோலை பிரகாஷ் சசிகுமாரின் படம் முழுக்க காமெடி இருக்கவேண்டும் என முயற்சித்திருக்கிறார்.. ஆனால் நிறைய காட்சிகளில் லாஜிக்கை எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு ரசிகர்களை சிரிக்கவைக்க முயற்சி செய்திருக்கிறார். பாலாசிங்கின் பிளாஸ்பேக், சமீபத்தில் தான் ஒரு படத்தில் வைக்கப்பட்டிருந்ததை இயக்குனர் கவனிக்க தவறிவிட்டார் போலும். இருநூறு டிவிக்கள் உள்ள கிராமத்தில் கேபிள் டிவி கனெக்சனுக்காக ஹீரோவுடன் மோதுகிறவர்தான் வில்லன் என்பது ரொம்பவே பலவீனமாக இருக்கிறது.

மொத்தத்தில் காமெடியையும் சசிகுமாரையும் விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப்படம் போட்டிருக்கும் தீனி குறைவுதான் என்றே சொல்லவேண்டும்.

Bale Vellaiya Theva Movie ReviewBale Vellaiya Theva ReviewBale Vellaiya Theva Tamil Movie ReviewBale Vellaiya Theva Tamil Reviewபலே வெள்ளையத்தேவாபலே வெள்ளையத்தேவா – விமர்சனம்