நடிகர்கள் : விமல், ஸ்ரேயா, பிரபு, புன்னகை பூ கீதா, கே.ஆர்.விஜயா, சத்யன், ரேகா, உமா ரங்கநாதன், கிரேன் மனோகர்
இசை : அம்ரிஷ்
ஒளிப்பதிவு : ஆர்.பி.குருதேவ்
இயக்கம் : ஆர்.மாதேஷ்
தயாரிப்பு : பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேஷன் – புன்னகை பூ கீதா
விமல் – ஸ்ரேயா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சண்டக்காரி’ ரசிகர்கள் மனதை கவர்கிறாரா ? அல்ல காயப்பட்த்துகிறாரா ?, விமர்சனத்தை பார்ப்போம்.
லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியான ஸ்ரேயாவின் உதவியாளராக விமல் வேலைக்கு சேருகிறார். தங்கப்பதக்கம் வென்ற பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், தான் உருவாக்கிய செயலியை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்ரேயாவுக்கு உதவியாளராக பணியாற்றும் விமல், அவரது கடும் கோபத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்.
இதற்கிடையே, ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடைந்த நிலையில், அவர் விசாவை தொடர இந்தியா சென்று அங்கிருந்து தான் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய சி.இ.ஓ பதவி கிடைக்காமல் போகும் நிலை உருவாகிறது. இதனால் என்ன செய்வது என்று யோசிக்கும் ஸ்ரேயா, நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்து கொண்டது போல் நடித்து, லண்டன் குடியுரிமை பெற முடிவு செய்கிறார். அதே சமயம், ஸ்ரேயாவின் எதிராளியுடன் கைகோர்க்கும் விமல், ஸ்ரேயாவை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதோடு, அவரது பணி உயர்வை தடுக்க திட்டம் போடுகிறார்.
அதன்படி, ஸ்ரேயாவின் திட்டத்திற்கு சம்மதிக்கும் விமல், தமிழகத்தில் இருக்கும் தனது பெற்றோரை நேரில் சந்திக்க வேண்டும், என்ற நிபந்தனை விதிக்கிறார். விமலின் நிபந்தனையை ஏற்று அவருடன் தமிழகம் செல்லும் ஸ்ரேயாவின் திட்டம் வெற்றி பெற்றதா? அல்லது விமலின் திட்டம் வெற்றி பெற்றதா ? என்பது தான் ‘சண்டக்காரி’ படத்தின் கதை.
தஞ்சை மாவட்டமாக இருந்தாலும் சரி, லண்டனாக இருந்தாலும் சரி, ஆடை மட்டுமே மாறுமே தவிர தோற்றமும், நடிப்பும் எப்போதும் மாறாது, என்பதை நிரூபிக்கும் வகையில் விமல் வலம் வருகிறார். அதே விமல், அதே நடிப்பு என்று பயணித்திருக்கிறார்.
ஸ்ரேயாவின் முகத்தில் இருக்கும் பளபளப்பு அவரது நடிப்பில் இல்லை. கடும் கோபம் கொண்டவராகவும், மற்றவர்களை மதிக்காத திமிர் பிடித்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் ஸ்ரேயா, தனது வேலையை முடிந்தவரை சரியாக செய்திருக்கிறார்.
விமலின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக நடித்திருக்கும் புன்னகை பூ கீதா, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் என அனைவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் மாநகரத்தையும், தமிழக கிராமத்தையும் அழகாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். அம்ரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாகவும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்பவும் பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், இயக்குநர் கொடுத்த வரிசையின்படி காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறாரே தவிர, கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கவில்லை.
தன் கோபத்தினால் மற்றவர்களுக்கு சண்டக்காரியாக தெரியும் பெண்ணின் மனதில் உருவாகும் காதலை அழகாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.மாதேஷ், கமர்ஷியல் அம்சங்களும், காமெடி காட்சிகள் நிறைந்த திரைக்கதையோடு கலகலப்பான படத்தை கொடுத்திருக்கிறார்.
ஸ்ரேயா மற்றும் விமல் காமினேஷன், “பீட்சாவில் பாயா ஓற்றியது போல் இருக்கிறது” என்றே அவரே சொல்லிவிட்டு, அந்த காமினேஷனை வைத்துக்கொண்டு காதல் காமெடி டிராமாவை மிக சிறப்பாக நடத்தி ரசிகர்களை வயிறு வலிக்க சிறிக்க வைத்திருப்பதோடு, காதல் காட்சிகளை ரசிக்கும்படியும் படமாக்கியிருக்கிறார்.
சில காட்சிகள் தொடர்பில்லாதவாறு பயணிப்பது படத்தின் சிறு குறையாக இருந்தாலும், ஸ்ரேயாவின் அழகு அந்த குறைகளை மறக்கடித்து இந்த ‘சண்டக்காரி’-யை கொண்டாட வைத்து விடுகிறது.
ரேட்டிங் 3/5