“கதை சொல்ல வர்றாங்க.. நீ கிளம்பு” ; இயக்குனரை விரட்டிய ஆனந்தராஜ்..!

324

kathanayakan - anandraj

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து ‘கதாநாயகன்’ என்கிற படத்தையும் தானே தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்க, சூரி சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்..

இந்தப்படத்தில் முதன் முறையாக ஷேக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆனந்தராஜ்.. இந்தப்படத்தில் இவரை ஒப்பந்தம் சீய்ம்போது நடந்த வேடிக்கையான விஷயம் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் நகைச்சுவையாக பேசினார் இயக்குனர் முருகானந்தம்.

சில மாதங்களுக்கு முன் வெளியான மரகத நாணயம் படத்தில் ஆனந்தராஜின் கையாட்களில் ஒருவராக நடித்தவர் தான் இந்த முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.. அதன்பின் விஷ்ணு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து அதில் ஷேக் கேரக்டரில் ஆனந்தராஜை நடிக்க வைக்க மேனேஜர் மூலமாக அப்பாயின்மென்ட் வாங்கினார்..

பின்னர் ஆனந்த்ராஜிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்க அவரது வீட்டுக்கு சென்றாராம் முருகானந்தம். கம்பெனியில் இருந்து யாரோ ஒரு இயக்குனர் கதை சொல்ல வருகிறார் என தகவல் வந்ததால் கதை கேட்க தயாராக இருந்த ஆனந்தராஜுக்கு, தன்னுடன் நடித்த முருகானந்தம் அந்த நேரத்தில் வந்ததும் ‘இந்தாளு எதுக்கு இந்நேரத்துல வர்றார்” என யோசித்தாராம்..

இரண்டு நிமிடம் பேசிவிட்டு சரிப்பா நீ கிளம்பு.. இன்னொரு நாளைக்கு சாவகசமா பேசலாம். இப்போ கதைசொல்ல ஒரு டைரக்டர் வர்றார் என கூறி முருகானந்தத்தை கிளப்ப முயற்சித்தாராம்.

அதன்பின்னர் முருகானந்தம் தான் தனக்கு கதை சொல்லவந்துள்ள இயக்குனர் என தெரிந்ததும் ஆச்சர்யமாகி போனாராம்.. “அடப்பாவி நீயா.. மரகத நாணயம் படத்துல நடிக்கிறப்ப கூட இப்படி டைரக்சன் பண்ணப்போறேன்னு சொல்லவே இல்லையேப்பா” என செல்லமாக இயக்குனரை கோபித்துக்கொண்டாராம்.

Comments are closed.