நடிகர்கள் : தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
இயக்கம் : தனுஷ்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ் – எம்.கலாநிதி மாறன்
தனது 50 வது படத்தில் இயக்குநாகவும் களம் இறங்கியிருக்கும் தனுஷின் ‘ராயன்’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
சிறுவயதில் தனது இரண்டு தம்பிகள் மற்றும் கைக்குழந்தையாக இருக்கும் தனது தங்கையுடன் சென்னைக்கு வரும் தனுஷுக்கு, லாரி ஓட்டுநரான செல்வராகவன் அடைக்கலம் கொடுக்கிறார். கூலி வேலை செய்து தம்பிகளையும், தங்கையையும் காப்பாற்றும் தனுஷ் பெரியவனானதும் ஃபாஸ்ட் புட் ஒன்றை நடத்தி வருகிறார். தனுஷ் வசிக்கும் பகுதியை தாதக்களான எஸ்.ஜே.சூர்யா மற்றும் சரவணன் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையே அவ்வபோது மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக வரும் உதவி போலீஸ் கமிஷ்னர் பிரகாஷ்ராஜ், ரவுடிகளுக்கு இடையே மோதலை உருவாக்கி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாக வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக சில சதிதிட்டங்களை அவர் செய்ய, எதிர்பாரத விதமாக இந்த பிரச்சனையில் தனுஷின் குடும்பம் சிக்கிக்கொண்டு சின்னா பின்னமாகிறது.
தம்பிகளையும், தங்கையையும் நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைதியாக பயணிக்கும் ராயன் தனுஷ், பிரச்சனையில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற ராவணனாக உருவெடுக்க, அதன் பிறகு நடப்பவைகளை இரத்தம் தெறிக்க சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
நடிப்பு அசுரன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் தனுஷ், ராயன் என்ற கதாபாத்திரத்தில் நிதானமாக நடித்திருப்பதோடு, இயக்குநராக நாயகனை கடந்து மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் நாயகன் என்றாலும், நாயகி, தனக்கான அறிமுக பாடல், காதல் பாடல் என்றெல்லாம் பயணிக்காமல், திரைக்கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
தனுஷின் தம்பிகளாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சந்தீப் கிஷனின் காதலியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் மட்டும் இன்றி குத்தாட்டத்திலும் அசத்தியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, எப்போதும் போல் தனது கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், தாதாவாக நடித்திருக்கும் சரவணன் இருவரும் அனுபவமான அளவான நடிப்பு மூலம் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
அழுத்தமான கதாபாத்திரத்தில் ராயனின் காட் ஃபாதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தாலும், பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் உணர்ச்சிகரமாக இருப்பதோடு, காட்சிகளுடன் பார்க்கும் போது ரசிகர்களை பரவசமடைய செய்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, ஜாக்கியின் கலை இரண்டும் எதார்த்தமாக மட்டும் இன்றி பிரமாண்டமாகவும் இருக்கிறது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் சண்டைக்காட்சிகளும் அசத்தல்.
அதிரடியான ஆக்ஷன் பட விரும்பிகளை மனதில் வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் தனுஷ், நடிகர் தனுஷுக்கான மாஸ் காட்சிகளுடன் படத்தை நகர்த்தினாலும், அண்ணன் – தங்கை செண்டிமெண்ட்டை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். தங்கைக்காக எதையும் செய்யக்கூடிய தனுஷ், தம்பிகளின் திடீர் மாற்றத்தை மண்ணிக்காமல், தண்டிப்பது லாஜிக் மீறலாக இருக்கிறது.
ரவுடிசத்துக்குள் போகாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கும் தனுஷ், தம்பிக்காக கத்தி எடுத்துவிட்டு, அதே கத்தியில் தனது தம்பிகளை காவுவாங்குவதை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்பது இயக்குநர் தனுஷுக்கு தெரியாமல் போனது பெரும் சோகம். அதைவிட சோகம், ”கொலை கொலையா முந்திரிக்கா மரத்தை மரத்தை சுத்தி வா…” என்று பாட்டு பாடுவது போல் ஆட்களை கொத்து கொத்தாக போட்டுத்தள்ளும் தனுஷின் தம்பிகள், அண்ணனின் எதிரி யார்? என்று தெரியாமல் அவருடனே பயணிப்பது எல்லாம் திரைக்கதையின் பெரும் ஓட்டைகள்.
திரைக்கதை சற்று தொய்வடைய செய்தாலும், மேக்கிங்கில் மிரட்டியிருக்கும் இயக்குநர் தனுஷ், நடிகர்களை பயன்படுத்திய விதம், சென்னை குடிசைப்பகுதி மற்றும் பிரமாண்டமான அரங்குகள் ஆகியவற்றின் மூலம் படத்தை ரசிக்க வைப்பதோடு, தனது ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
சாதுவாக இருக்கும் ஒருவன் பெரிய தாதாவாக உருவெடுக்கப் போகிறான், என்பதை ரசிகர்கள் படத்தின் ஆரம்பத்திலேயே யூகித்துவிடுவார்கள், என்பதை அறிந்துக்கொண்டு திரைக்கதையில் திருப்பத்தை வைக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் தனுஷ் மேற்கொண்ட விசயம், ஒட்டு மொத்த படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது. அதிலும், முதல் பாதியை மெதுவாக நகர்த்தி ரசிகர்களை சோதித்தவர், இரண்டாம் பாதியில் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, என்ன என்னத்தையோ செய்து, திரை முழுவதும் இரத்தத்தை தெறிக்க விட்டு, ரசிகர்களை தலை தெறிக்க ஓட விடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘ராயன்’ இரத்தம் மட்டுமே.
ரேட்டிங் 3/5
Comments are closed.