அளவில்லாத மகிழ்ச்சியாக இருக்கிறது

  1. என் வாழ்க்கையில் மிகப்பெரிய வசந்தத்தை ஏற்படுத்திய என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இன்று என் வாழ்க்கை இவ்வளவு- அழகாக மாறியிருப்பது அளவில்லாத மகிழ்ச்சியாக இருக்கிறது.

எத்தனையோ பேர் என்னைப் பாராட்டுகிறார்கள். என்னுடன் பேசுவார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத பலரும் இன்று என்னுடன் அன்பாகப் பேசுகிறார்கள். குறிப்பாக, பல்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள் என்னுடைய நடிப்பையும் பயணத்தையும் பாராட்டுகிறார்கள். இதெல்லாம் எப்படி சாத்தியமானது, எப்படி நடந்தது என்று இன்றும் எனக்குப் புரியவில்லை. ஆனால், கார்த்திக் சுப்புராஜ் என்ற ஒரு தேவதையின் வழியாக இவை அனைத்தும் எனக்குக் கிடைத்திருக்கின்றன.

நான் இதுவரை பல மேடைகளில் மற்றவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசியிருக்கிறேன். ஆனால், என்னைப் பற்றி ஒருவர் மேடையில் பேசுவதையும், அதை நான் நேரில் கேட்பதையும் இப்போதுதான் அனுபவிக்கிறேன்.

“என் அக்கா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்… இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார்…” என்று ஒவ்வொரு மேடையிலும் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். என்னைப் பற்றி யார் பேசினாலும், பேசாவிட்டாலும், ஒவ்வொரு மேடையிலும் மைக்கைப் பிடிக்கும்போது என் பெயரைச் சொல்ல நீங்கள் தவறியதே இல்லை. அது எனக்குக் கொடுத்த மகிழ்ச்சியும் பிரமிப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

ஏனென்றால், இத்தனை ஆண்டுகளாக என்னுடைய உழைப்பு இப்படிக் கொண்டாடப்பட்டதே இல்லை.

முதன்முதலில் கேமரா முன்பு நான் நடித்தபோது, எனக்காகக் கைதட்டி உற்சாகப்படுத்தியவர் நீங்கள். ஒவ்வொரு முறையும், “சூப்பர்க்கா… சூப்பர்க்கா…” என்று பாராட்டியபோதெல்லாம் எனக்குள் கண்ணீர் வந்திருக்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டினால் அழுது நடிக்கிறேன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணத்தில் என்னுடைய உணர்வுகளை அடக்கிக்கொண்டேன்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுடன் அமர்ந்து முதன்முதலில் டோரதி படத்தைப் பார்த்தபோதுதான் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்றுதான் மனம் திறந்து அழுதேன். அன்றிரவு முழுவதும் அழுது தீர்த்தேன் என்று சொல்லலாம். இத்தனை ஆண்டுகளாக எனக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அன்றுதான் வெளியே வந்தன.

அதற்குப் பிறகு கனடா வரை என்னை அழைத்துச் சென்று, அத்தனை பேருக்கு முன்னாலும் “அக்கா… அக்கா…” என்று அன்போடு அழைத்தீர்கள். ஒவ்வொரு இடத்திலும் என்னை உங்கள் அக்காவாக அறிமுகப்படுத்தினீர்கள். அந்த அன்பையும் மரியாதையையும் நான் எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை.

நீங்கள் செய்த எல்லாவற்றுக்கும் வெறும் நன்றி என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், உங்களை நான் என் உடன்பிறந்தவராகவே பார்க்கிறேன். அந்த உறவு எனக்கு அவ்வளவு உணர்வுபூர்வமானது.

என்னை உங்கள் அக்காவாக ஏற்றுக்கொண்டதோடு நிற்காமல், இன்று பலரும் என்னை “அக்கா… அக்கா…” என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு ஒரு அழகான உறவை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறீர்கள். இதைவிட ஒரு மனிதருக்கு என்ன மகிழ்ச்சி வேண்டும்?

கடைசி நாள் படப்பிடிப்பில் உங்களுடன் எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் இந்த அன்பும், இந்தப் பயணமும், நீங்கள் எனக்குக் கொடுத்த அங்கீகாரமும் என் நினைவுக்கு வரும்.

என்ன சொல்வது என்று தெரியவில்லை தம்பி… மனம் நிறைய அன்பும், நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் மட்டுமே இருக்கிறது.

I LOVE YOU, தம்பி! ❤️

என்றென்றும் உங்கள் அன்பு அக்கா,
ஜீவா ❤️🙏
#dorothy #KarthikSubbaraj #jeevasubramaniyan