ஒரு நாள் ஒரு மதிய வேளை…
ஜெமினி ஸ்டூடியோ கேன்டீன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மெலிந்த தேகமும், ஒட்டிய வயிறும், கலைந்த தலையுமாக ஒரு இளைஞன் சோர்வாக வருகிறான். அந்த பரபரப்புக்கு இடையே, ‘‘ஐயா… ஒரு கிளாஸ் தண்ணி குடுங்கய்யா! ரொம்ப தாகமா இருக்கு’’ என்கிறான் அந்த இளைஞன். ‘‘ஸ்டூடியோ வாட்ச்மேன் என்ன பண்றான்? தூங்குறானா… முதல்ல முதலாளிகிட்ட சொல்லி வைக்கணும். கண்ட கண்ட பிச்சைக்காரனையெல்லாம் உள்ளே விட்டுர்றாங்க’’ என்று சலித்தபடி அரை டம்ளர் தண்ணீர் கொடுக்கிறான் ஒருவன். அதை வாங்கிக் கொண்ட இளைஞன், ஓரமாகச் சென்று
தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பொட்டலத்தை எடுத்து, அதில் இருந்ததை வாயில் போட்டு தண்ணீரைக் குடித்தான். டம்ளரைக் கொடுத்துவிட்டு திரும்புகையில் பொத்தென்று கீழே விழுந்தான்.
வாயில் நுரை பொங்கியது. காரணம், அவன் சாப்பிட்டது மயில்துத்தம். அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். தற்கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து
நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டான் அவன். விசாரணை நடந்தது.
‘‘உன் பெயர் என்ன?’’
‘‘சந்திரபாபு.’’
‘‘ஏன் இப்படிச் செய்தாய்?’’
‘‘எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு!’’
‘‘இனிமே இப்படிச் செய்வியா?’’
‘‘சொல்ல முடியாது?’’
‘‘ஏன் முடியாது!’’
‘‘என் வலி உங்களுக்குப் புரியாது!’’
‘‘ஏன் புரியாது?’’
நீதிபதி இப்படிக் கேட்டதும் அந்த இளைஞன் தன் பையில் இருந்து தீப்பெட்டி எடுத்து, ஒரு குச்சியைக் கொளுத்தி தன் கைக்கு நேராகப் பிடித்தான். நீதிபதி பதறிப் போனார். ‘‘பார்த்தீர்களா! என் கையில்
தீப்பிடிக்கப் போகிறது என்பதுதான் உங்களுக்குத் தெரிந்தது. அதன் வலியை நான் மட்டுமே உணர முடியும். தூரத்தில் இருக்கும் உங்களால் முடியாது’’ என்றான்.
வழக்கிலிருந்து மன்னித்து விடுவிக்கப்பட்டார் சந்திரபாபு. விஷயத்தைக் கேள்விப்பட்ட எஸ்.எஸ்.வாசன், அப்போது தான் தயாரித்துக் கொண்டிருந்த ‘மூன்று பிள்ளைகள்’ படத்தில் சிறிய வாய்ப்புக்
கொடுத்தார். இப்படித்தான் சினிமாவுக்குள் நுழைந்தார் சந்திரபாபு.
ப.நீலகண்டன் ‘சபாஷ் மீனா’ என்ற பெயரில் முழுநீளக் காமெடிப் படம் இயக்க முடிவு செய்து சிவாஜியிடம் கதை சொன்னார். கதையைக் கேட்ட சிவாஜி, அதில் கடைசி வரை ஹீரோவுடன் வரும் நண்பன் கேரக்டரை சந்திரபாபு செய்தால் நன்றாக இருக்கும் என்றார். நீலகண்டனும் சந்திரபாபுவிடம் கதையைக் கூறிவிட்டு சிவாஜி சொன்னதையும் சொன்னார். அதைக் கேட்ட சந்திரபாபு, ‘‘மிஸ்டர் சிவாஜி ஒரு குட் ஆக்டர். என் டேலன்ட்டை புரிஞ்சிக்கிட்டிருக்கார்’’ என்றார். சிவாஜியை பெயர் சொல்லி அழைக்கவே தயங்கும் காலத்தில் பாபுவின் இந்தப் பேச்சு நீலகண்டனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘மிஸ்டர் சிவாஜி கணேசனுக்கு எவ்வளவு கொடுக்கறீங்களோ
அதைவிட ஒரு ரூபாய் கூடுதலா
கொடுங்க, போதும்’’ என்றார். இதை நீலகண்டன் சிவாஜியிடம் சொன்னபோது கலகலவெனச் சிரித்தார். ‘‘அவன்கிட்ட திறமை இருக்கு. அப்படித்தான் சொல்லுவான். அவன் கேட்டதைக் கொடுத்திடுங்க.
இல்லேன்னா இந்தப் படத்தை கைவிட்டுருங்க’’ என்றாராம்.
முதன்முதலாக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் சந்திரபாபு. அவர் கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர் உள்பட அன்றைக்கிருந்த டாப் ஹீரோக்கள் காத்துக் கிடந்தார்கள். ஒரு சின்ன உதாரணம் இது…
ஏவி.எம் நிறுவனம் ‘சகோதரி’ என்ற படத்தைத் தயாரித்தது. படம் முடிந்ததும் போட்டுப் பார்த்த மெய்யப்பச் செட்டியாருக்கு, படம் திருப்தி தரவில்லை. ‘‘இந்தப் படம் ஓட வேண்டுமென்றால் சந்திரபாபுவின் காமெடியைச் சேர்க்க வேண்டும்’’ என்றார். சந்திரபாபுவை அழைத்து பார்க்கச் சொன்னார். படத்தைப் பார்த்த பாபுவும், ‘‘இது தேறாது’’ என்றார். ‘‘அதற்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.
படத்துல தனி காமெடி சேர்த்துக் கொடு’’ என்றார். உடனே பாபு, ‘‘எனக்கு என்ன சம்பளம் தருவீர்கள்?’’ என்று கேட்டார். ‘‘ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் தருகிறேன்’’ என்றார் செட்டியார். ‘‘அது எனக்குப் போதாது’’ என்றார் பாபு. ‘‘சரி, வேலையை முடி! சம்பளத்தை பிறகு பேசிக் கொள்ளலாம்’’ என்றார் செட்டியார். சந்திரபாபுவும் கண்ணதாசனிடம், ‘நான் ஒரு முட்டாளுங்க…’ பாடலை எழுதி வாங்கி, அதற்குரிய காமெடி டிராக்கை உருவாக்கி,
படத்தில் சேர்த்துக் கொடுத்தார். படம் ஹிட்டானது. பாபு எதிர்பார்க்காத சம்பளத்தைக் கொடுத்தார் செட்டியார். அன்று முதல் தன் சம்பளத்தை படத்துக்கு ஒரு லட்சம் ரூபாயாக ஆக்கினார் பாபு.
மதுவுக்கு அடிமையாகி இருந்தாலும், தொழிலில் சுத்தமாக இருந்ததால் செல்வச் செழிப்பில்தான் இருந்தார் பாபு. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் 19 கிரவுண்டில் வீடு கட்டினார். முதல் தளத்துக்கே கார் செல்லும் வகையில் இதைக் கட்டினார். ‘‘இது மாதிரி ஒரு வீட்டை சென்னையில் யாராவது கட்டினால் இந்த வீட்டை குண்டு வச்சு தகர்த்துடுவேன்’’ என்று சொன்னார்.
எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து வந்த பாபு, தன்னுடைய ‘மாடி வீட்டு ஏழை’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரிடமே போய் நின்றார். பாபு எப்போதுமே முரண்பாடுகளின் மொத்த உருவம். பாபுவுடன் கருத்து மாறுபாடு
கொண்டிருந்தாலும், எம்.ஜி.ஆர் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் அந்தப் படம் ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டது. அதனால் பாபு கடனாளி ஆனார். வீடு, வாசல் அத்தனையையும் இழந்து வீதிக்கு வந்தார்.
‘மாடி வீட்டு ஏழை’ படம் எடுக்கப் போனவர், நிஜமாகவே மாடிவீட்டு ஏழையானார்.
சந்திரபாபு பெருங் குடிகாரர்… இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு சந்திரபாபு பற்றி தெரிந்திருக்கும் ஒரே விஷயம். இன்றைக்கு குடிக்காத நடிகர்கள் மிகக் குறைவு. ஆனால் வெளிப்படையாக
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சந்திரபாபு தனது பலவீனங்களை வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.
தன் குடிப்பழக்கம் பற்றி அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்… ‘‘சந்திரபாபு குடிகாரன் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால் படப்பிடிப்பு நடக்கும்போது குடிப்பதில்லை. ஒவ்வொரு மனிதனையும் அழைத்து,
அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். அவன் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவுமறைவின்றி கூறிவிடுவான், அழுது விடுவான். மதுவுக்கு அந்த சக்தி உண்டு. மதுவை நான் அளவோடு தினமும் குடிப்பேன். ஆனால் ‘மாடி வீட்டு ஏழை’ படம் எடுக்கத் துணிந்தபிறகு மொடாக்குடியனானேன். அந்த மயக்கம் போதாதென்று பெத்தடினுக்கு வந்தேன்.’’
மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய பணம் இல்லாமல், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சந்திரபாபு.
அப்போது அவர், தான் நடித்த படங்களில் காமெடியாகச் செய்ததை எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல செய்து வந்திருக்கிறார். எது சாப்பிட்டாலும் சாப்பிட்ட தட்டைத் தூக்கி எறிவது, திடீரென்று பெட்டுக்கு பெட் தாவுவது, நர்சுகளோடு கைகோர்த்து வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுவது என்று நாட்களைக் கழித்திருக்கிறார். 1974ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி அவர் உயிர் பிரிந்தது. அவரது ஆசைப்படி அவர் உடல், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டில் வைக்கப்பட்ட பின்னர், கிறிஸ்தவ சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு திருமணம் செய்து வைத்த பாதிரியாரே அவருக்கு இறுதிச் சடங்கையும் நடத்தி வைத்தார். மரணத்துக்கு ஒரு பாதிரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும் அன்றுதான்.
நடிகர் சந்திரபாபு பற்றி பேசுவோர், பலரும் முதலிர வன்றே மனைவியின் கண்ணீருக்கு மதிப்பு தந்து காதலனுடன் பெருந்தன்மையுடன் அனுப்பி வைத்ததாக சொல்லி புளங்காகிதப்படுவார்கள்
முதலிரவுகூட நடக்காமல் மனைவியை காதலனோடு அனுப்பி வைத்தார் என்பதெல்லாம் முழுக்க முழுக்க கட்டுக்கதை.. உண்மையில் சந்திரபாபு மனைவி ஷீலாவோடு பெங்களுருவில் தேனிலவு கொண்டாடினார்.. மூன்று மாதங்கள் போன நிலையில்தான் தனக்கு காதலன் இருப்பதாகவும் அவர் மனம் முழுக்க ஆட்டிப்படைப்பதால் மன அளவில் உண்மையான மனைவியாக இருக்க முடியவில்லை என்று ஷீலா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு பெரிய அளவில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. டைரக்டர்களில் பீஷ்மர் எனப்படும் கே.சுப்ரமணியம், எம்.ஜிஆர் போன்றோர் தலையிட்டும் சரிசெய்யமுடியவில்லை..தம்பதியர் கடைசியில் பிரிந்தேபோனார்கள். ஷீலா புதுக்கணவரோடு லண்டனில் செட்டிலாகிவிட்டார்
சினிமா உலகைவிட்டே ஓடிப்போய் டெல்லியில் தனியாக தங்கி மதுவே கதி என்று கிடக்கும் அளவுக்கு சந்திரபாபுவை பாதிக்கச்செய்தது இந்த விஷயம்தான்..பிறகு திரும்பிவந்தது இரண்டாவது இன்னிங்சை சினிமாவில் சந்திரபாபு ஆரம்பித்தது தனிக்கதை
இன்னொரு கதை, சந்திரபாபு பண்ண சேஷ்டைகளால் எம்ஜிஆர் இழுத்தடிச்சி அழவைத்தார் என்பது உண்மைதான்..ஆனால் எம்ஜிஆரால்தான் சந்திபாபு அப்படியே போண்டியானார்னு சொல்லிகிட்டு திரியறதுதான் செம பேத்தல். அப்புறம் எப்படி அதன் பின்னாடி கண்ணன் என் காதலன் அடிமைப்பெண் போன்ற படங்களில் எம்ஜிஆருடன் சந்திரபாபு நடித்தார்?,இவற்றுக்கெல்லாம் பதில்
தெரிந்தவர் சந்திரபாபு அவர்களே.. பதிவு-பிரசாந்த்!
நன்றி: சம்பத்குமார்